×

ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்ததாக கூறி போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் பலி?உறவினர்கள் குற்றச்சாட்டு,.. மறியலால் மதுரையில் பரபரப்பு

மதுரை: ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்ததாக கூறி, போலீசார் தாக்கியதில், இறைச்சி கடைக்காரர் பலியானதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், போலீசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளி விடாமல் காய்கறி மார்க்கெட், கறிக்கடைகளில் கூட்டம் கூடுகிறது. எனவே, வரும் 14ம் தேதி வரை இறைச்சிக்கடைகளை மூடுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து இறைச்சிக்கடைகள் மூடப்பட்டன. மேலும், மாவட்டத்தில் சமூக இடைவெளியை வலியுறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மதுரை, கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் குட்டை மரக்காயர் (எ) அப்துல் ரஹீம் (82). அப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை வைத்துள்ளார்.

நேற்று காலை தனது கடையில் உள்ள கோழிகளுக்கு தீவனம் போடுவதற்காக கடையை அப்துல் ரஹீம் திறந்தததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார், ‘‘ஊரடங்கை மீறி இறைச்சி  கடையை எதற்காக திறந்தாய்’’ என்று கூறி, லத்தியால் சரமாரியாக தாக்கியதில் அப்துல் ரஹீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக, உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர். மேலும், சம்பவத்தை கண்டித்து கருப்பாயூரணியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அப்துல் ரஹீமின் மருமகன் முகமது சேட் மற்றும் அருகே கடை வைத்திருந்த சிலர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வேகமாக வந்த அப்துல் ரஹீம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது, இதையடுத்து முகமது சேட், மாமனார் அப்துல் ரஹீம் தடுமாறி கீழே விழுந்ததில் இறந்து விட்டதாக கடிதம் எழுதி கொடுத்துள்ளார் என்று தெரிவித்தனர். இச்சம்பவம் மதுரை கருப்பாயூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Meat shopkeeper ,police attack ,Madurai , Curfew, slaughter of meat shop, Madurai
× RELATED போலீஸ் தாக்கி இளைஞர் பலி: அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை